லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: திருவாரூரில் விவசாயிகள் கடும் பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் ஐந்து லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
கனரக வாகனங்களுக்கான எஃப்.சி. (Fitness Certificate) புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதை எதிர்த்து, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ள காலகட்டத்தில் ஏற்பட்ட இந்த வேலை நிறுத்தம், விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கொள்முதல் நிலையங்களில் வழங்கப்பட்ட சுமார் ஐந்து லட்சம் நெல் மூட்டைகள் இதுவரை எடுத்துச் செல்லப்படாமல் தேங்கியுள்ளதால், புதிதாக அறுவடை செய்த நெல் மூட்டைகளை எங்கு வைப்பது என்ற கவலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதனால், நெல் கொள்முதல் மற்றும் போக்குவரத்து பணிகள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.