திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 18 காளைகள் பங்கேற்றன.
காளைகளை அடக்கும் போட்டியில், ஒவ்வொரு அணியிலும் 9 பேர் வீதம் மொத்தம் 162 காளையர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்தப் போட்டி, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ரொக்கப் பரிசுகள், ஆட்டுக்குட்டி, தென்னங்கன்று, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு போட்டி, அனைவரிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.