பாதுகாப்பு அதிகாரியின் நடவடிக்கையால் பரபரப்பு – ஜெர்மனியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சங்கடம்
ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாதுகாப்பு சோதனையின் போது ஏற்பட்ட சங்கடமான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்வதேச பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பாக நடைபெற்ற இந்த மாநாட்டில், 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு வளாகத்திற்குள் ராணுவ சீருடையில் தனது குழுவுடன் நுழைய முயன்ற அசிம் முனீரை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தி, அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
பாதுகாப்பு நடைமுறையின் ஒரு பகுதியாகவே அடையாளச் சான்று சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த சம்பவம் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. சிலர் இதனை இராஜதந்திர ரீதியிலான அவமானம் என குறிப்பிட்டாலும், மற்றவர்கள் சர்வதேச மாநாடுகளில் இத்தகைய பாதுகாப்பு சோதனைகள் வழக்கமானவை என விளக்கம் அளித்தனர்.
இதேநேரம், பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா, உலக அரங்கில் அசிம் முனீரை பெரிதாக யாரும் அறியவில்லை என்றும், பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் பணிவுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, ஜெர்மனியை தளமாகக் கொண்ட சிந்து அரசியல் அமைப்பான ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் (JSMM), அசிம் முனீர் மாநாட்டில் பங்கேற்றதை எதிர்த்து மாநாட்டு வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் தலையீடுகளில் ஈடுபடுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.
மேலும், 1971-ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பவங்களை நினைவூட்டி, அவை வங்கதேசம் உருவாக காரணமான இனப்படுகொலை என JSMM குற்றஞ்சாட்டியது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் தீவிரவாத குழுக்களை ஆதரிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அரசு இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறது.