ஏலியன்கள் நிஜமா? – ரகசிய பதிவுகளை வெளியிட டொனால்ட் டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஏலியன்கள் தொடர்பான விவரங்கள் மற்றும் அடையாளம் காணப்படாத வானியல் நிகழ்வுகள் (UAP) பற்றிய ரகசிய ஆவணங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறையும் நாசாவும் சேகரித்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத வானியல் பொருட்கள் (UFO) மற்றும் ஏலியன்கள் தொடர்பான தகவல்கள் பல ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தன. இதுகுறித்து நீண்ட காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
சமீபத்தில், “ஏலியன்கள் இருப்பது உண்மையே” என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருந்ததும், “இதன்மூலம் ஒபாமா மிகப் பெரிய தவறு செய்துள்ளார்” என டிரம்ப் விமர்சித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
இந்த சூழலில், டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், ஏலியன்கள், பறக்கும் தட்டுகள் போன்றவற்றை சார்ந்த அனைத்து அரசு பதிவுகளையும் கண்டறிந்து வெளியிட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏலியன்கள் குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.