“ரூ.5,000 முன்கூட்டியே வரவு – தோல்வி பயத்தின் வெளிப்பாடு” : அன்புமணி விமர்சனம்
மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில் திமுக அரசை சாடிய பாமக தலைவர்
மகளிர் வங்கி கணக்குகளில் முன்கூட்டியே ரூ.5,000 வரவு வைக்கப்பட்டிருப்பது திமுக அரசின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துவதாக பாமக தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஆட்சி கையை விட்டுப்போகும் சூழ்நிலை ஏற்பட்டதை உணர்ந்த திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு தடை இல்லை என்பது பொதுமக்களுக்குக் கூட தெரிந்த விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை மக்கள் ஏமாற்று முயற்சியாகவே பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு கூடுதலாக ரூ.6,550 கோடி கடன் பெற்றுள்ளதாகவும், அந்தச் சுமை இறுதியில் மக்கள்மீதே விழும் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர் என்றும் அன்புமணி கூறினார்.
வரவிருக்கும் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க மக்கள் தீர்மானித்துள்ளனர் என்றும், மே மாதத்தில் வெளியாகும் தேர்தல் முடிவுகள் அதனை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.