முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்ை சந்தித்தது ஏன்? – ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக, இன்று சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது அறையில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடரில் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் சட்டசபையில் தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது மற்றும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தனது ஆதரவு எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:
“தமிழகத்தில் திமுக அரசு தனது ஆட்சிக்காலத்தை சிறப்பாக நிறைவு செய்ததையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே அய்யப்பன் எம்.எல்.ஏ. வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை, கடந்த ஐந்து ஆண்டுகளின் நிலைமை, திமுக அரசு தமிழகத்திற்கு செய்துள்ள சாதனைகள் ஆகியவை மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. எனவே, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு நல்ல மாற்றத்திற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. எனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து பொறுமையாக காத்திருந்து பாருங்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.