10.5% இடஒதுக்கீடு விவகாரம் – திமுக அரசை கடுமையாக விமர்சித்த ராமதாஸ்
வன்னியர் சமூகத்திற்கு உரிய 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல், இன்னும் எத்தனை உயிர்களை திமுக அரசு இழக்கச் செய்யப் போகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ள நிலையிலும், தமிழக அரசு அதை செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த இடஒதுக்கீடு அமலாகாததால், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை இழந்து, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளைப் பெற முடியாமல் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, அரசு வேலை கிடைக்காத மனவேதனையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் உயிரிழந்த செய்தி தன்னை மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளாக்கியதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், வன்னிய சமூக இளைஞர்கள் நம்பிக்கை இழந்து தங்களைத் தாங்களே பாதிக்கும் முடிவுகளை எடுக்காமல் பொறுமையும் தைரியமும் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.