திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புறக்கணிப்பு – அன்புமணி குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை பாதுகாப்போம் என்று கூறிய திமுக அரசு, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்காமல் விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி வந்த திமுக, நடைமுறையில் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளதாகவும், தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் திமுக அரசின் வஞ்சனையால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய அரசு பொறுப்பேற்கும் போது, ஆசிரியர் தகுதித் தேர்வை மீண்டும் நடத்தி, அதனால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.