வரும் 23ம் தேதி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை: மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி சென்னை வர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களால் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அதே நாளில் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து சிறப்புரையாற்ற உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறப்பதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.