தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட போகி பண்டிகை
பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகாலை முதலே போகி பண்டிகையை பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர். பழைய, பயன்பாடற்ற பொருட்களை தீயிட்டு எரித்தும், வீடுகளின் முன்பாக வண்ணமயமான கோலங்கள் இட்டும் மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.
“பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற மரபை பின்பற்றி, முன்னோர்கள் காலம் தொட்டு போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த மரபின் அடிப்படையிலேயே, இந்தாண்டும் மாநிலம் முழுவதும் மக்கள் போகியை விமரிசையாக கொண்டாடினர்.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில், அதிகாலை நேரத்திலேயே வீடுகளின் முன் பழைய பொருட்களை எரித்து, பழைய கவலைகள், துயரங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்களை விட்டு விடுவதாக மக்கள் தெரிவித்தனர். இளைஞர்கள் போதை பழக்கங்களை விட்டு விலகி நல்ல வாழ்க்கை பாதையில் செல்ல வேண்டும் என்ற வேண்டுதலையும் அவர்கள் முன்வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், பொதுமக்கள் வீட்டு வாசல்களில் போகி தீ மூட்டி கொண்டாடினர். சிறுவர்கள் போகி மேளம் அடித்து உற்சாகம் காட்ட, பெண்கள் அழகிய வண்ணக் கோலங்கள் இட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வீடுகளின் முன் பழைய பொருட்களை எரித்து மக்கள் பாரம்பரிய முறையில் போகி பண்டிகையை கொண்டாடினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர், வி.பி.என். நகர், பீரங்கிமேடு உள்ளிட்ட பகுதிகளில், அதிகாலை முதலே பொதுமக்கள் வீடுகளின் முன் தீ மூட்டி போகியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் கடம்பத்தூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம், கும்மிடிபூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், தாமரைப்பாக்கம், வெள்ளவேடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் போகி பண்டிகை உற்சாகமாக நடைபெற்றது.
இதற்கிடையே, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் முன்பாகவும் போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோயில் முன்பாக விறகுகள் குவிக்கப்பட்டு, அதன் மீது கற்பூரம் வைத்து அதிகாரிகள் தீ மூட்டி போகி கொண்டாட்டத்தை நடத்தினர்.