பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு – பயணிகள் அதிர்ச்சி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயண கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் அரசு பேருந்துகளுடன் சேர்த்து தனியார் ஆம்னி பேருந்துகளையும் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ.4,200 ஆகவும், சென்னை – கோவை வழித்தடத்தில் ரூ.3,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகை காலங்களில் கட்டண உயர்வு செய்யக்கூடாது என தமிழக அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தாலும், அதனை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பின்பற்றவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.