திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, திண்டுக்கல் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் நல பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கைகளில், மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்றும், சிறப்பு காலமுறை சம்பளம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேறவில்லை என குற்றம்சாட்டிய மக்கள் நல பணியாளர்கள், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் கல்லறை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.