எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல் – பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்
பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில், சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா உள்ளிட்டோர் மீது திமுக ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியின் உண்மை முகத்தை பார்த்து தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அந்த மக்கள் கோபத்தைக் கண்டு அச்சமடைந்த திமுக, இதுபோன்ற வன்முறை செயல்களை நாடுகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், விவாத மேடைகளில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கே கூட திமுக தரப்பினர் வன்முறையையே பதிலாக அளிப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை அடக்குவதற்கு ஒப்பானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அத்துடன், தமிழக முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் காவல்துறை, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கண்டிப்பாக விளக்கம் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.