2026 ஆங்கில புத்தாண்டு – கிருஷ்ணகிரியில் கேக் வெட்டி மகிழ்ந்த பாஜகவினர்!
கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் கேக் வெட்டி, ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
பாஜக தொழில் பிரிவு மாவட்டத் தலைவர் லோகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், BJP என்ற எழுத்து வடிவில் தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி, மாவட்ட அளவிலான பாஜக நிர்வாகிகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.
ஆங்கில புத்தாண்டை வரவேற்க ஈரோட்டில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து புத்தாண்டைக் கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இனிப்புகளை பகிர்ந்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
அதேபோல் ராமேஸ்வரத்திலும் பொதுமக்கள் காவல்துறையினருடன் இணைந்து கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
மதுரையில் வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இக்கொண்டாட்டத்தில் காவல்துறையினரும் கலந்து கொண்டு கேக் வெட்டி உற்சாகத்தைப் பகிர்ந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் காவல்துறையினர் ஒன்றிணைந்து புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினர். திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட நான்கு முனை சந்திப்பில், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்று வந்த நிலையில், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்.
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ஆங்கில புத்தாண்டு விழா நடைபெற்றது. இதில் திரளான மக்கள் நடனமாடி உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடினர். அப்போது மக்கள் இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.