புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் பணியாளரை கத்தியால் தாக்கிய ரவுடி – பரபரப்பு
தமிழகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வடமாநில ரயில்வே கேட் பணியாளரை ரவுடி ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் என்பவர் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார்.
திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ரயில், நமணசமுத்திரம் ரயில்வே கடவையை கடக்க இருந்ததால், பாதுகாப்பு நடவடிக்கையாக தீரஜ்குமார் கேட்டினை மூடியுள்ளார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த ரவுடி கார்த்தி, அவசரமாக செல்ல வேண்டியதாகக் கூறி ரயில்வே கேட்டினைத் திறக்குமாறு கேட் கீப்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கார்த்தி தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீரஜ்குமாரை தாக்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்த சக பணியாளர்கள், கார்த்தியை சுற்றிவளைத்து பிடித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து, காயமடைந்த தீரஜ்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ரவுடி கார்த்தியை கைது செய்த ரயில்வே போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.