ஆங்கில புத்தாண்டு – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்ட பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து, சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெருமளவு பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலை 1 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் கடலில் புனித நீராடிய பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசைகளில் நின்றனர். பொது தரிசனத்திற்கு சுமார் ஆறு மணி நேரமும், 100 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு சுமார் ஐந்து மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர். “வெற்றிவேல், வீரவேல், முருகனுக்கு அரோகரா” என்ற முழக்கங்களுடன் அவர்கள் இறைவனை வழிபட்டனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததன் காரணமாக, திருச்செந்தூர் நகரம் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது.
அதேபோல், சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கோயிலுக்கு வந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன் பின்னர், அனைவருக்கும் சக்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.