திருப்பூரை குப்பை மேடாக மாற்றும் முயற்சி – திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை கடும் விமர்சனம்
கமிஷன் அரசியலின் உண்மை முகத்தை மறைக்க, திருப்பூர் நகரத்தையே குப்பை நகரமாக மாற்ற திமுக அரசு முயற்சி செய்து வருவதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில் குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு எதிராக, பொதுமக்கள் முதலமைச்சரை கண்டித்து கருப்பு தினம் அறிவித்திருப்பது, திமுக அரசுக்கு மக்கள் வழங்கும் தீவிர எச்சரிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தூய்மை தரவரிசையில்,
- சென்னை 38-வது இடத்திலும்
- கோவை 28-வது இடத்திலும்
பின்தங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை,
மதுரை நகரம் மிகவும் அசுத்தமான நகரமாக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது, திமுக அரசின் நகர்ப்புற நிர்வாகத்தின் முழுமையான தோல்வியை வெளிப்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
இந்த மோசமான நிலைக்கு அடிப்படைக் காரணமாக உள்ள ஊழல் மற்றும் கமிஷன் அரசியலை மறைக்கவே, திருப்பூர் போன்ற முக்கிய தொழில் நகரத்தை குப்பை கொட்டும் மையமாக மாற்ற திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இடுவாய் கிராம மக்களின் நியாயமான போராட்டத்திற்கு பாஜக முழுமையாக துணை நிற்கும் என்றும், மக்கள் நலனுக்கு எதிரான எந்த முடிவையும் அனுமதிக்க முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.