விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தி கும்மிடிப்பூண்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில், அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தி விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் குத்துச்சண்டை, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்று அந்தப் பகுதிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். எனினும், போதிய அடிப்படை வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லாததால், பயிற்சி மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தங்களின் விளையாட்டு திறன்களை மேலும் மேம்படுத்தவும், எதிர்கால வீரர்களை உருவாக்கவும், கும்மிடிப்பூண்டி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு திடலை அமைத்துத் தர வேண்டும் என நீண்ட காலமாக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்ததாகவும் கூறினர்.
இந்த நிலையில், பூவலம்பேடு பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விளையாட்டு திடல் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தியடைந்த கும்மிடிப்பூண்டி பகுதி விளையாட்டு வீரர்கள், தங்கள் பகுதிக்கு உரிய விளையாட்டு மைதானம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, விளையாட்டு வீரர்கள் கோஷங்களை எழுப்பி, கும்மிடிப்பூண்டி பகுதியில் உடனடியாக விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், வீரர்களின் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக உறுதியளித்ததாகத் தெரிகிறது.