முறையான குடிநீர் விநியோகம் கோரி செய்யாறு அருகே கிராம மக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அனக்காவூர் கிராமத்தில் முறையான குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அனக்காவூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், அருகே உள்ள செய்யாறு ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஆற்றில் இயங்கும் கிணறுகளின் மோட்டார்கள் பழுதடைந்ததால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் முழுமையாகத் தடைபட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக ஊராட்சி செயலாளர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தங்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அனக்காவூர் கிராம மக்கள் செய்யாறு – வந்தவாசி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால், அந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.