மண்பாண்ட கலைஞர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? – பொங்கல் தொகுப்பில் மண் பானை சேர்க்குமா தமிழக அரசு?
பொங்கல் திருநாள் அண்மித்து வரும் சூழலில், பொதுவிநியோகக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசுப் பெட்டியுடன் மண் பானையும் சேர்த்து வழங்க வேண்டும் என மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பான செய்தித் தொகுப்பை இப்போது காணலாம்.
தமிழர்களின் பாரம்பரியமும் பண்பாட்டும் பிரதிபலிக்கும் முக்கியமான திருவிழா பொங்கல். தை மாதத்தில் சூரிய தேவனை வணங்கும் விதமாக, இல்லத்தின் முன்புறத்தில் மண்ணால் உருவாக்கப்பட்ட அடுப்பில், புதிய மண் பானையை வைத்து, புது அரிசியால் இனிப்புப் பொங்கல் சமைப்பது தமிழர் மரபின் அடையாளமாக விளங்குகிறது. இந்தப் பண்டிகை நெருங்குவதால், தமிழகம் முழுவதும் மண் பானை உற்பத்தி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகிலுள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மண்பாண்ட தயாரிப்பு தொழில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இங்கு உருவாக்கப்படும் மண் பானைகள் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன், மதுரை, திண்டுக்கல் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் வணிக நோக்கில் அனுப்பப்படுகின்றன.
மண் பானை தயாரிக்க தேவையான களிமண் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள், கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் இருந்து மண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
முன்னர் புது மண் பானையில் பொங்கலிடுவது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது பித்தளை பாத்திரங்கள், எவர் சில்வர் பாத்திரங்கள் மற்றும் குக்கர் போன்றவற்றில் பொங்கல் சமைக்கும் நடைமுறை அதிகரித்துள்ளது. இதனால் மங்கிப் போகும் மண்பாண்ட தொழிலுக்கு மீண்டும் உயிர் ஊட்டும் வகையில், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் மண் பானையும் சேர்க்கப்பட வேண்டும் என மண்பாண்ட கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.