திருப்பரங்குன்றம் தர்காவுக்கு செல்ல அனுமதி கோரி போராட்டம் – பாஜக நிர்வாகி கைது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தர்காவிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தர்காவிற்கு வழிபாட்டிற்காக செல்ல வேலூர் இப்ராஹிம் அங்கு வந்துள்ளார். அப்போது, பாதுகாப்பு காரணங்களைக் கூறி போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, தர்காவிற்கு செல்ல அனுமதி வழங்க மறுத்தனர். பூர்ண சந்திரனின் ஆன்மா சாந்தி பெற வேண்டி வழிபாடு செய்ய உள்ளதாக வேலூர் இப்ராஹிம் விளக்கம் அளித்தபோதும், போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தர்காவிற்கு செல்ல அனுமதி வழங்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்த வேலூர் இப்ராஹிம், அங்கு தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக பொதுமக்களும், பாஜக தொண்டர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது சில பெண்கள் முருகன் பாடல்களை பாடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தர்ணா போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், பொதுமக்களுடன் இணைந்து பாஜகவினர் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடினர். இதனால் அப்பகுதியில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் எனக் கருதி, போராட்டத்தில் ஈடுபட்ட வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.