கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் – மூவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 12ஆம் தேதி, ராயக்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தை குறிவைத்து, அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு இளம்பெண் கடுமையாக காயமடைந்தார்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பாலகுறி பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தனுஷ் மற்றும் சேகர் ஆகிய மூவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த மாதம் அதே தனியார் பேருந்து மோதிய விபத்தில் தங்களது நண்பர்கள் இருவர் உயிரிழந்ததால், பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், பன்றிவேட்டைக்காக பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.