இன்ஸ்டா ரீல்ஸில் தொடங்கிய கனவு… ஐபிஎல் ஏலப் பட்டியலில் முடிந்த பயணம்!
மாநில அணியில் இடமில்லை, வயது பிரிவு போட்டிகளிலும் வாய்ப்பு இல்லை. ஆனால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்து, நேரடியாக ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்றால் நம்பவே கடினம். ஆனால் அந்த அசாத்தியத்தை சாதித்துள்ளார் இளம் லெக் ஸ்பின்னர் இஸாஸ் சவாரியா. அவரது வித்தியாசமான கிரிக்கெட் பயணமே இந்தச் செய்தி தொகுப்பு.
2005-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி, வட கர்நாடகாவின் பிடார் பகுதியில் பிறந்தவர் இஸாஸ் சவாரியா. அவரது தந்தை இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியதால், சிறுவயதிலேயே பல நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. 2017-ம் ஆண்டு விஜய் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்த இஸாஸ், ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளராகத்தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்.
பயிற்சியாளர்களின் ஆலோசனையை ஏற்று, பின்னர் அவர் தனது பந்துவீச்சு பாணியை லெக் ஸ்பின்னாக மாற்றிக்கொண்டார். ஆனால் கர்நாடகா Under-15 அணியில் இடம் கிடைக்காதது, இளம் வயதிலேயே அவருக்கு பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு தனது திறமையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இஸாஸ் ஜெய்ப்பூருக்கு இடம்பெயர்ந்தார். அங்குள்ள சன்ஸ்கார்க் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து, விடுதியில் தங்கி கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அனைத்து முயற்சிகளுக்கும் பிறகும், மாவட்ட அணியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காதது அவரை மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் மனம் தளராமல், தனது திறமையை வெளிப்படுத்த புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார் இஸாஸ். தினசரி பயிற்சிக்குப் பிறகு தனது பந்துவீச்சுகளை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களாக வெளியிடத் தொடங்கினார். ஆரம்பத்தில் அதிக பார்வைகள் கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து பதிவிடுவதை அவர் நிறுத்தவில்லை.
இந்த முயற்சிக்கே பெரும் திருப்புமுனையாக அமைந்தது, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத் அளித்த ஒரு கமெண்ட். “நீங்கள் சிறப்பாகப் பந்து வீசுகிறீர்கள்” என்ற அந்த வார்த்தைகள், இஸாஸுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தன.
அதன்பின் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும், வீடியோ பார்வைகளும் வேகமாக உயரத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த சுனில் ஜோஷி, இஸாஸை நேரடியாகத் தொடர்புகொண்டு பேசினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
லக்னோவில் பஞ்சாப் கிங்ஸ் அணி நடத்திய ட்ரயல்ஸில் பங்கேற்ற இஸாஸ், அங்கு தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். அதன் பலனாக, 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் Uncapped ஸ்பின்னர்கள் பட்டியலில் இஸாஸ் சவாரியாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட பல அணிகள் இவர்மீது கவனம் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கமான கிரிக்கெட் பாதையைத் தவிர்த்து, சமூக ஊடகத்தின் வழியாக நேரடியாக ஐபிஎல் வாசலுக்கு வந்த முதல் வீரர் என்ற தனித்துவமான அடையாளத்தையும் இஸாஸ் பெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்குப் பின்னால் தனது தந்தை, சகோதரி மற்றும் பயிற்சியாளர்களின் ஆதரவே முக்கிய காரணம் என இஸாஸ் கூறியுள்ளார். தனது சொந்த வருமானத்தில் பெற்றோருக்காக ஒரு வீடு கட்டித் தர வேண்டும் என்பதே தனது நீண்டகால இலக்கு என்றும், அந்தக் கனவை நனவாக்க கடுமையான பயிற்சியுடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.