சர்வதேச பயங்கரவாதத்தின் அடிப்படை தளம் பாகிஸ்தான் – ஐநா மேடையில் இந்தியாவின் கடும் கண்டனம்
உலகளாவிய பயங்கரவாத செயல்களின் முக்கியத் தளமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மீண்டும் வலுவாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஜம்மு–காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் முன்வைக்கும் உரிமைக் கோரிக்கைகளைத் தெளிவாக மறுத்த இந்தியா, ஜம்மு காஷ்மீரும் லடாகும் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கங்கள்; அவை கடந்த காலத்திலும் இந்தியாவுக்குச் சொந்தமானவையே, தற்போதும் அதுவே நிலை, எதிர்காலத்திலும் மாற்றமில்லை என உறுதியாக அறிவித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு சபையில் நடைபெற்ற “அமைதிக்கான தலைமைத்துவம்” என்ற தலைப்பிலான சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ஹரீஷ் பர்வதனேனி, பாகிஸ்தானின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் பாகிஸ்தான், இந்தியாவையும் அதன் குடிமக்களையும் பாதிப்பதற்காக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும், ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர் என்ற நிலையை பயன்படுத்தி, பிரிவினைச் சதிகளை சர்வதேச மேடையில் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஜம்மு–காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் முன்வைத்த கருத்துகளை முற்றாக நிராகரித்த ஹரீஷ் பர்வதனேனி, அவை அடிப்படையற்றவை, தேவையற்றவை என்றும் தெளிவுபடுத்தினார்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நீண்ட காலமாக நிதி மற்றும் பாதுகாப்பு வழங்கி வரும் பாகிஸ்தானின் வரலாற்றை சுட்டிக்காட்டிய இந்திய தூதர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார். 65 ஆண்டுகளுக்கு முன்பு நல்லுறவு அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட போதிலும், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக மூன்று போர்களை நடத்தியதோடு, ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். அந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான தீவிரவாத செயல்களுக்கும் பாகிஸ்தான் வழங்கி வரும் ஆதரவை முழுமையாக கைவிடும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தும் முடிவில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் நிலவரத்தையும் எடுத்துரைத்த ஹரீஷ் பர்வதனேனி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைத்தது, அவரது அரசியல் கட்சிக்கு தடை விதித்தது, 27-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசியல் சதியை அரங்கேற்றியது, அதன் வழியாக அசிம் முனீரை ராணுவத் தலைவராக்கியது மற்றும் அவருக்கு ஆயுள் பாதுகாப்பு வழங்கியது ஆகியவற்றை சுட்டிக்காட்டினார். இவை அனைத்தும் பாகிஸ்தானில் ஜனநாயகம் முற்றாகச் சீர்குலைந்ததற்கான எடுத்துக்காட்டுகள் என அவர் தெரிவித்தார்.
மேலும், அடியலா சிறையில் இம்ரான் கானுக்கு வழங்கப்படுவதாக கூறப்படும் மனிதாபிமானமற்ற நடத்தை மற்றும் சித்ரவதை குறித்து, ஐநா சிறப்பு அறிக்கையாளர் ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் எழுப்பிய கவலைகளையும் அவர் நினைவூட்டினார்.
ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் கருத்தை மேற்கோள் காட்டிய இந்திய தூதர், “முந்தைய தலைமுறைக்காக வடிவமைக்கப்பட்ட அமைப்புகள் மூலம் எதிர்கால தலைமுறைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது” எனக் கூறி, ஐநா அமைப்பில் அவசர சீர்திருத்தங்கள் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்படும் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் இந்தியா தனது முழு வலிமையுடன் எதிர்த்து நிற்கும் என்று, ஐநா பாதுகாப்பு சபை மேடையில் இந்தியா தெளிவாக அறிவித்துள்ளது.