சேலத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சேலத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அரசுத் துறைகளில் நிலுவையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன.
இந்தப் போராட்டத்தை முன்னிட்டு, சேலம் கோட்டை மைதானப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.