பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பாசன தேவையை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளதால், வைகை ஆற்றின் கரையோரம் உள்ள 6 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள வைகை அணையில் தற்போது 63.94 அடி நீர்மட்டம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கிருதுமால் நதி பாசனம், பெரியார் கால்வாய் பாசனம் மற்றும் பிரதான மதகுகள் வழியாக கூடுதல் அளவில் நீர் திறக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, வினாடிக்கு 1,300 கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் தற்போது 2,111 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களை கடந்து செல்லும் வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதையடுத்து, ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என்றும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.