உதகையில் கடும் உறைபனி – வெண்மைப் போர்வை விரித்தது போல் கண்ணை கவரும் தோற்றம்!
உதகை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் கடும் உறைபனியால், அந்தப் பகுதி முழுவதும் வெண்மையான போர்வை விரித்தது போல மனதை மயக்கும் காட்சியை வழங்குகிறது.
நீலகிரி மலைத்தொடர்களில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனி தாக்கம் காணப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், இவ்வாண்டும் நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பதிவாகியுள்ளது.
இதன் விளைவாக, பூங்காக்கள், புல்வெளிகள், திறந்த வெளி மைதானங்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்திலும் பனி அடர்த்தியாக படர்ந்துள்ளது. இதனால் முழு பகுதியும் வெண்மை கம்பளம் விரித்தது போல் அழகிய தோற்றத்தில் காணப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் பனித் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், வெப்பநிலை தொடர்ந்து குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களில் உறைபனி படர்ந்துள்ளதால், பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.