அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி – மின்சார வாரிய பெண் அதிகாரி மீது புகார்
கன்யாகுமரி மாவட்டம் அருகே, அரசு பணியிடங்களை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பலரிடமிருந்து பெரும் தொகை வசூலித்து மோசடி செய்ததாக மின்சார வாரியத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீவா என்பவர், மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் கீதா என்ற பெண் அதிகாரியின் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், மின்வாரியத்தில் ஓட்டுநர் பணியிடத்தை ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்காக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கீதா கூறியதாக ஜீவா தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை மாவட்ட திமுக மகளிரணி தலைவராகவும் அறிமுகப்படுத்திய கீதா, அரசியல் செல்வாக்கு இருப்பதாக நம்ப வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நம்பிக்கை கொண்ட ஜீவா, இரண்டு தவணைகளாக மொத்தம் 5 லட்சம் ரூபாயை கீதாவிடம் ஒப்படைத்துள்ளார்.
ஜீவாவைப் போலவே பலரும் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கீதாவிடம் பணம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நீண்ட நாட்கள் கழிந்தும் எவருக்கும் வேலை கிடைக்காததால், பணத்தை திருப்பிக் கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் அவரை அணுகியுள்ளனர்.
அப்போது கீதா சரியான விளக்கம் அளிக்காமல், மாறாக உயிர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.