விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் – அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த தொடர்ச்சியான மழையால் உயிரிழந்த இரு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:
“வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்ட நிர்வாகம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால், விருதுநகர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 19 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்.
ராஜபாளையம் பகுதியில் ஒரு சுற்றுச்சுவர் இடிந்து 35 ஆடுகள் உயிரிழந்துள்ளன. அதற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். மேலும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு ரூ.4,000 வீதம் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகள் அனைத்தும் சீரமைக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்,” என்றார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது:
“நிவாரணம் வழங்குவது மட்டும் போதாது; எந்த உயிர்ச் சேதமும் ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வரின் தெளிவான அறிவுரையாகும். அதற்கான வழிகாட்டுதல்கள் அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் மழை நீர் தேங்கக்கூடிய 15 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தேவையான நடவடிக்கைகள் நீர்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும்,” என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.