கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை
கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் மாணவர் சேர்க்கை முறையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைத்து மாணவர்களும் அதன் பலனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு பாதிக்கும் குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளன. இது அரசின் அலட்சியத்தையும் திட்டமிடல் குறைபாடையும் காட்டுகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டு, ஏப்ரலில் விண்ணப்பங்களைப் பெற்று, மே மாதத்தில் சேர்க்கை நடைபெற வேண்டும். ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற காரணத்தால், இம்முறை தமிழக அரசு மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்தது. பின்னர், அக்டோபர் 2-ஆம் தேதி தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பில் இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களும், ஏற்கனவே கட்டணப் பிரிவில் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில் தகுதியுள்ளோருக்கே கட்டணத் திருப்பிச் செலுத்தல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவே இப்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு காரணம்.
நர்சரி பள்ளிகளில் சேர்க்கை சற்று அதிகமாக இருந்தாலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணம் அதிகம், விதிமுறைகள் கடுமையாக உள்ளதால் விண்ணப்பங்கள் குறைவாகவே வந்துள்ளன. இதன் அடிப்படையில், நர்சரி பள்ளிகளில் 45,721 இடங்களுக்கு 65,306 விண்ணப்பங்கள் வந்துள்ளன; ஆனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 34,666 இடங்களுக்கு வெறும் 16,006 விண்ணப்பங்களே வந்துள்ளன.
அரசு அறிவிப்பை வெளியிட்ட போதே, பள்ளியில் சேராத மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தியிருந்தேன். அதுபோல் நடந்திருந்தால், அனைத்து மாணவர்களும் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்ந்து இருப்பார்கள். ஆனால், தவறான அரசின் அணுகுமுறை காரணமாக சில பள்ளிகளில் இடமின்மை, சில பள்ளிகளில் காலி இடங்கள் போன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இப்போது நர்சரி பள்ளிகளில் 20,000 பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்த முடியாது. அதே சமயம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 18,600 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான நிதி அரசிடம் மீதமிருக்கிறது. அந்த பணம் மத்திய அரசுக்கு திருப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது திமுக அரசின் தவறான கொள்கைகளின் விளைவு.
தமிழகத்தில் கல்வி முறை முன்னேறுவதற்குப் பதிலாக சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து மாணவர்களும் பயனடைய வேண்டும்; அதே நேரத்தில் மத்திய நிதியும் வீணாகாமல் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை மீண்டும் நடத்தி, தகுதியுள்ள அனைவருக்கும் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்,” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.