அனுமதி மறுப்பால் பொதுமக்கள் அதிருப்தி: செம்மொழிப் பூங்கா அவசரமாகவே திறந்ததா?
கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த செம்மொழிப் பூங்கா, இன்னும் பொதுப் பயன்பாட்டுக்கு தயாராகாததால், வருகை தரும் மக்கள் விரக்தியுடன் திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே இடம் திறக்கப்பட்டதுதான் இந்நிலைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
கோவை மத்திய சிறைச்சாலையின் பரப்பில், 45 ஏக்கரில், 208 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பூங்கா கடந்த நவம்பர் 25ஆம் தேதி திறக்கப்பட்டது.
ஆனால், பணிகள் அவசரமாக முடிக்காமல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்பே குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போதும் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால், அதிகாரிகள் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க மறுப்பதால், வருவோர் எல்லாம் ஏமாற்றத்துடன் மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை நீடிக்கிறது.
நுழைவு வாயிலின் முகப்பு, மாநாட்டு மண்டபம், சுற்றுச்சுவர், விளையாட்டு திடல், திறந்தவெளி உடற்பயிற்சி பகுதி உள்ளிட்ட பல அமைப்புகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் உள்ளன.
மேலும், இப்பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கூட பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பார்வையாளர்களுக்குத் தேவையான உணவகம், குடிநீர், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகளும் இப்போது கிடைக்காத நிலையில்,
“இவ்வளவு அவசரத்தில் பூங்காவை திறக்க வேண்டிய அவசியம் என்ன?”
என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.
கோவை செம்மொழிப் பூங்காவை திறந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததைச் சுற்றிய விவாதம் முதல், தற்போது அனுமதி மறுப்பு வரை பல குழப்பங்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன.
எந்த ஒருத் திட்டத்தையும் திறந்து வைக்கும் முன், அதற்கான பணிகள் முழுமையாக முடிந்துள்ளதா என்பதை முதலில் உறுதி செய்த பிறகே முதலமைச்சர் தொடங்கி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வலுத்து வருகிறது.