தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கயத்தாறு காவல் சரகத்துக்குட்பட்ட காப்புலிங்கம்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த கோமு, மதுவுக்கு பழக்கப்பட்டவர். அவருக்கும், அவரது மனைவி தங்கத்தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், தங்கத்தாய் தாய் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தார்.
அவரை தன் உறவினர்கள் மந்தரம் மற்றும் முருகன் மறைத்து வைத்துள்ளனர் என்ற சந்தேகம் கோமுவுக்கு எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மந்தரம் மற்றும் முருகன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு சென்ற கோமு அரிவாளை எடுத்துச் சரமாரியாக இருவரையும் தாக்கியதாக தகவல்.
காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இரட்டை கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கோமுவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.