சென்னை ஆவடி அருகே உள்ள ஒரு மனநல மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தனது தாயின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.
சேக்காடு அன்னை சத்தியா நகர் பகுதியில் RK மனிதநேய காப்பகம் என்ற பெயரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 56 பேர் சிகிச்சை மற்றும் பராமரிப்பில் உள்ளனர்.
இந்த மையத்தில், வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர் தனது தாய் மேரியை சுமார் 20 நாட்களுக்கு முன் அனுமதி செய்திருந்தார்.
இந்நிலையில் மேரி உடல்நிலை திடீரென மோசமடைந்து உயிரிழந்துவிட்டதாக மைய நிர்வாகம் பாஸ்கருக்கு தகவல் அளித்தது.
இதையடுத்து பாஸ்கர் காப்பகத்துக்கு சென்று மரணம் குறித்து விளக்கம் கேட்டு விசாரித்தபோது, நிர்வாகம் தெளிவான பதில் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த பாஸ்கர், தாயின் மரணம் முறைகேடு அல்லது கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கலாம் என கூறி போலீசில் முறையான புகார் அளித்துள்ளார்.