தீபாவளி பண்டிகை: அரசியல் தலைவர்கள் சார்பில் நல்வாழ்த்துகள்!
தீபாவளி திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் அனைவருக்கும் தங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில்,
“மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பானது தீபாவளி. இந்த இனிய திருநாளில், ஒளி இருளை வென்றது போல நன்மை தீமையை வெல்லட்டும். மக்கள் தங்கள் இல்லங்களை அலங்கரித்து, தீபங்களை ஏற்றி, புத்தாடைகள் அணிந்து, உறவினர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடி, இனிப்புகள் பகிர்ந்து மகிழும் இந்த நாளில், அன்பும் அமைதியும் நிரம்பிய சமுதாயம் உருவாகட்டும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வாழ்த்தில்,
“இருளை ஒளி வென்றதும், தீமையை நன்மை வென்றதுமான நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. சாதி, மத, இன வேறுபாடுகளை தாண்டி, மக்கள் ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன் தீபாவளியை அனுபவித்து வருகின்றனர்.
இந்நாளில் மக்கள் ஒற்றுமையுடன் வெறுப்பு மனப்போக்குகளை முறியடித்து, மத நல்லிணக்கத்தைக் காப்போம். பாதுகாப்பாகவும், சகோதரத்துவ உணர்வுடன் தீபாவளியை கொண்டாடுவோம். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததில்,
“இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் தீப ஒளித் திருநாளை, உலகம் முழுவதும் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
தீமையை வென்ற நன்மையின் அடையாளம் இந்த திருநாள். இந்நாளில் புத்தாடை அணிந்து, இனிப்புகளைப் பகிர்ந்து, பிற மத நண்பர்களுடன் மகிழ்வது நல்லிணக்கத்தை வலுப்படுத்துகிறது.
இன்றைய சூழலில் மக்களை பாதிக்கும் பல தீமைகள் உள்ளன — விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்றவை. இவற்றை அகற்றும் ஒளியாக இந்த தீப ஒளித் திருநாள் அமையட்டும்,” எனக் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தனது வாழ்த்தில்,
“இந்த ஆண்டின் தீபாவளி வலிமையான பாரதத்தை உருவாக்கியிருக்கிறது. அடுத்த தீபாவளி வளமான தமிழகம் உருவாகும் நாளாக அமையட்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை ஒளியாக விளங்குகிறது. அடுத்த தீபாவளியில் தமிழகம் வளமும் நலனும் நிறைந்த மாநிலமாக மாறட்டும்,” எனக் குறிப்பிட்டார்.
மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியதில்,
“இந்தியாவின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகத் திகழும் தீபாவளி, மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நாளாகும்.
இந்த நாளில் நாடு வளம் பெறவும், சமூக ஒற்றுமை உறுதிப்பெறவும் உறுதி ஏற்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் பண்பாட்டை பாதுகாப்போம். தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்,” எனத் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்தில்,
“தீபங்களின் திருவிழாவான தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
இயந்திரமயமான வாழ்க்கையில் உறவுகள் மீண்டும் நெருக்கமாகி, மகிழ்ச்சியுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பண்டிகைகள் வழங்குகின்றன.
அன்பு, அமைதி, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நிலைத்திடட்டும். இல்லாமை எனும் இருள் அகன்று, இன்ப ஒளி பிரகாசித்து, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் நலமுடனும் வாழட்டும்,” என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.