தென்காசி மாவட்டம் கடையம் பகுதி அருகே உள்ள பாப்பான்குளத்தில், மயானத்திற்குச் செல்ல சரியான சாலை இல்லை என்பதால், ஒரு மரணமடைந்தவர் உடலை உறவினர்கள் கடுமையான சிரமத்துடன் கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவானது.
மயானத்திற்குச் செல்லும் பாதை இல்லாததால், கால்வாயில் கழுத்துவரை தேங்கியிருந்த நீரில் இறங்கி, சடலத்தை தோளில் சுமந்து நீண்ட தூரம் நடந்துச்செல்லும் துயரமான காட்சி கிராம மக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த மோசமான நிலையை கண்ட கிராம மக்கள், இதே பிரச்சினையை பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக்காட்டியும் தீர்வு கிடைக்கவில்லை என கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மயானத்திற்குச் சாலை வசதி உடனடியாக அமைக்க வேண்டுமென்று கோரி, சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, மயானச் சாலை பிரச்சினைக்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அவர்களது உறுதிமொழிக்குப் பிறகு கிராம மக்கள் போராட்டத்தை நிறுத்தினர்.
இந்த சம்பவம், அந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.