தமிழக கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (ரெரா) மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்காக அண்ணா நகரில் ரூ.97 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மனை மற்றும் கட்டிட விற்பனை துறையில் வெளிப்படைத்தன்மையை உயர்த்தவும், நுகர்வோர் நலனை பாதுகாக்கவும், வாங்குபவர்களின் புகார்களுக்கு விரைவில் தீர்வு வழங்கவும் தமிழ்நாடு ரெரா (TNRERA) மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TNREAT) நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்புகளுக்காக அண்ணா நகரில் ரூ.77.60 கோடி செலவில் 19,008 சதுர அடி பரப்பளவில், 56,000 சதுர அடி கொண்ட புதிய கட்டிடம் தமிழக வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டது. மேலும் ரூ.19.49 கோடி செலவில் கட்டிடத்துக்குள் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அலுவலகத்தில் பொதுமக்களுக்கான ஹெல்ப் டெஸ்க், வாகன நிறுத்தம், வரவேற்பு மண்டபம், காத்திருப்பு அறை, மின்தூக்கி, முழுமையான ஏர்-கண்டிஷனிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவில் தலைமைச் செயலர் நா. முருகானந்தம், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவர் எம். துரைசுவாமி, ரெரா தலைவர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா, நிர்வாக உறுப்பினர் அபூர்வா, உறுப்பினர்கள் எல். சுப்பிரமணியன், டி. ஜெகந்நாதன், வழக்கறிஞர்கள் எம். கிருஷ்ணமூர்த்தி, சுகுமார் சிட்டிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.