சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று (நவம்பர் 18) முதல் நவம்பர் 25 வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ. குமரகுருபரன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பிஎல்ஓக்கள் வீடு வீடாக சென்று எஸ்.ஐ.ஆர் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை சேகரித்து வருகின்றனர்.
வாக்காளர்கள் படிவங்களை நிரப்பும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனடி விளக்கம் வழங்கவும், 2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் குடும்ப உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பது போன்ற தகவல்களையும் சரிபார்க்கும் வகையில், 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட உள்ளன.
வாக்காளர் பட்டியல் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் (PLA) முக்கிய பங்கு வகிக்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன், PLA-க்கள் தினமும் அதிகபட்சம் 50 நிரப்பப்பட்ட படிவங்களைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
படிவங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், கணினி வழியாக உடனடி தகவல் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வாக்காளர் உதவி மையங்களில் வழங்கப்படும்.