சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் மின்சார ரயில் சேவை, நகர மக்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான போக்குவரத்து முறையாக உள்ளது. சென்னை கடற்கரை–தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி போன்ற பல முக்கிய வழித்தடங்களில் இச்சேவை இயங்குகிறது.
சமீபகாலமாக, முதல் வகுப்பு பெட்டிகளில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகள், ஆண் பயணிகளால் அதிகமாக ஆக்கிரமிக்கப்படுவதாக பெண் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
திருநின்றவூர் பயணிகள் நிலையப் பொதுநலச் சங்கத் தலைவர் முருகையன் தெரிவித்துள்ளார்:
“முதல்வகுப்பு பெட்டிகளில் பெண்களுக்குப் பிரத்யேகமான பகுதி அமைக்கப்பட்டுள்ளதே. ஆனால் அதிக நெரிசல் காணப்படும் காலை, மாலை நேரங்களில் ஆண் பயணிகள் இந்த பகுதிகளில் புகுந்து அமருவது அதிகரித்திருக்கிறது. பெரும்பாலும் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கியவர்களே முதல் வகுப்பில் புகுந்து பெண்கள் இருக்கைகளை பிடித்துக் கொள்கின்றனர்,” என்றார்.
இதனால், பெண்கள் கூட்ட நெரிசலில் நின்றுகொண்டே பயணிக்க வேண்டிய நிலை உருவாகி வருவதாக அவர் கவலைத் தெரிவித்தார்.
ரயில்வே நிர்வாகத்திடம் இதுகுறித்து பலமுறை புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் சில நாட்கள் மட்டுமே டிக்கெட் பரிசோதகர்கள் தீவிரமாகச் செயல்பட்டு பின்னர் நிலைமை மீண்டும் பழையபடி மாறிவிடுகிறது எனப் பயணிகள் கூறுகின்றனர்.
முருகையன் மேலும் கூறியதாவது:
“இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு தேவை. முதல்வகுப்பு பெண்கள் பகுதியில் ஆண்கள் பயணிப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கி முதல்வகுப்பில் புகுவதை கட்டுப்படுத்த வேண்டும். உண்மையாக முதல் வகுப்பு டிக்கெட் வாங்கியவர்களே பயணம் செய்வதை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.