வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வலிமையான அழுத்தத்தை உருவாக்கும் வகையில் ‘சிறை நிரப்பும் போராட்டம்’ வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தனது தொண்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பது:
“சமூகநீதியை நோக்கி நமக்கென தனியே அமைந்துள்ள கல்–முள் நிறைந்த இன்னொரு போராட்டப் பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு துறைகளில் வன்னியர் சமூகத்துக்கு குறைந்தது 15% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை வலியுறுத்தி, டிசம்பர் 17 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ‘சிறை நிரப்பும் போராட்டம்’ நடத்த திட்டமிட்டுள்ளோம்.
திமுக அரசு செய்யும் சமூகநீதி தொடர்பான ஏமாற்றங்களையும், வாக்குறுதி துரோகங்களையும், மோசடிகளையும் மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நமது இடஒதுக்கீட்டு கோரிக்கை நிறைவேறப் போராடவும் வேண்டியது அவசியம். இதற்காகவே டிசம்பர் 17 ஆம் தேதியன்று நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம், வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்தத் தவிர்க்க முடியாத சூழலை உருவாக்கும் அளவுக்கு வலிமையாக அமைய வேண்டும். போராட்ட அரங்கில் உங்களுடன் தோழமையுடன் நின்று போராடும் நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.