தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை
தமிழகம், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நோட்டரி வழக்கறிஞர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:
மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை, அக்டோபர் 17ஆம் தேதியிட்ட அறிவிக்கையின் மூலம் நோட்டரிகள் (திருத்தம்) விதிகள், 2025-ஐ அறிவித்துள்ளது. மேலும், நோட்டரிகள் சட்டத்தால் (1952) வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் நோட்டரிகள் விதிகள், 1956 மேலும் திருத்தம் செய்யப்படுகிறது.
இதன்மூலம் தமிழகம், குஜராத், ராஜஸ்தான், நாகாலாந்து ஆகிய மாநில அரசுகளால் நியமிக்கப்படக்கூடிய அதிகபட்ச நோட்டரிகளின் (சான்று உறுதி அலுவலர்கள்) எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி:
- தமிழகம்: 2,500 → 3,500
- குஜராத்: 2,900 → 6,000
- ராஜஸ்தான்: 2,000 → 3,000
- நாகாலாந்து: 200 → 400
என நோட்டரிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள்தொகை வளர்ச்சி, மாவட்டங்கள் மற்றும் வருவாய் வட்டங்களின் எண்ணிக்கை, நோட்டரி சேவைகளுக்கான அதிகரித்த தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அந்தந்த மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
‘நோட்டரி பப்ளிக்’ எனப்படும் நோட்டரி வழக்கறிஞர்கள் சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், சாட்சியங்கள் போன்றவற்றுக்கு சான்றளித்து, அவற்றுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குகின்றனர்.
அதேபோல், ஒரு ஆவணத்தின் நகல் உண்மையானது என்பதையும், ஒருவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவதையும் அவர்கள் சான்றளிக்கின்றனர். மேலும், பிரமாணப் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்து பதிவு செய்வதும் இவர்களின் கடமையாகும்.