சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை தானே வீடியோ எடுத்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை தேவர் என்ற நபர், மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கடந்த ஏப்ரல் 28க்குள் சாலைகள் மற்றும் பொதுஇடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற உத்தரவிட்டிருந்தார்.
அதோடு, அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சொந்தமான இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கொடிகளை வைக்கலாம் என்றும், ஆனால் சாலைகளின் நடுவே உள்ள சென்டர் மீடியன்கள் மற்றும் பாலங்களில் கொடிக்கம்பங்களை அமைக்கக் கூடாது என்றும் தெளிவாக கூறியிருந்தார். மேலும், பொதுக்கூட்டங்களின் போது தற்காலிகமாக வைக்கப்படும் ஒவ்வொரு கொடிக்கம்பத்திற்கும் ரூ.1000 கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக சாலையோரங்களில் கொடிக்கம்பங்களை அமைத்ததை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ் திலக் ஆகியோர், கொடிக்கம்பம் விவகாரம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, மாவட்ட வாரியாக அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ‘‘தமிழக அரசு உருவாக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் பாராட்டத்தக்கது. ஆனால் எந்தக் கட்சியும் நீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடப்பதில்லை; அரசும் அதை முழுமையாக அமல்படுத்தவில்லை. சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சியினரே விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை நான் சுயமாக வீடியோ எடுத்துள்ளேன்,’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், அனுமதியின்றி சாலைகளில் கொடிக்கம்பங்களை அமைத்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொது இடங்களில் உள்ள சட்டவிரோத கொடிக்கம்பங்களை அகற்றிய விவரம் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கைகள் தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.
நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை மீறினால் தாமாகவே அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.