அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையிலான ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோப்புகள் இனி இணை இயக்குநர்கள் (பணியாளர் தொகுதி மற்றும் மேல்நிலைக் கல்வி) ஆகியோரின் பொறுப்பில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி, முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஊதிய முரண்பாடு தொடர்பான மனுக்களை உரிய இணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அனைத்து கோப்புகளும் விதிமுறைப்படி ஆய்வு செய்யப்பட்டு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.