டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், இன்று (நவ.13) முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.17-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவ.18-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியில் கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.