உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் உள்ளவர்களுக்கு அமெரிக்க விசா வழங்க தடை – புதிய உத்தரவு உடனடி அமல்
வாஷிங்டன்: இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு (சர்க்கரை நோய்), ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் அல்லது மனநிலை பாதிப்பு போன்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு உலகம் முழுவதும் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்களிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினருக்கான விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், வெளிநாட்டு பணியாளர்களுக்கான H1B விசா கட்டணம் ரூ.1.32 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சம் வரை உயர்த்தப்பட்டதால், இந்திய மென்பொறியாளர்களுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்புகள் கடுமையாக குறைந்துள்ளன.
புதிய உத்தரவின் படி, தீவிர நோய்கள் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு (இதய நோய், புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன், நரம்பியல்/மனநிலை பாதிப்பு உள்ளிட்டோர்) சுற்றுலா, மாணவர், வணிக விசாக்கள் வழங்கக்கூடாது என வெளிநுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன:
“சில வெளிநாட்டினர் உடல்நிலையை காரணம் காட்டி அமெரிக்காவில் நீண்டகாலம் தங்கி, அரசு வழங்கும் சுகாதார திட்டப் பலன்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அமெரிக்க வரிப்பணிகள் வீணாகின்றன. இதைத் தடுக்கும் வகையில், தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.”
இனி, விசா விண்ணப்பிக்கும் நபர்களின் உடல்நிலை, தொற்று நோய் அபாயம், நிதி நிலை ஆகியவற்றை விரிவாக மதிப்பீடு செய்து மட்டுமே விசா வழங்கப்படும். மேலும், அமெரிக்கா சென்ற பிறகு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால், அவர்களே தங்கள் செலவில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி பெறப்படும்.
தற்போது பல தூதரகங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லை என்பதால், விசா அதிகாரிகளே விண்ணப்பதாரர்களின் உடல்நிலை தொடர்பான விசாரணையை நடத்துவார்கள். எதிர்காலத்தில் தேவையானால், மருத்துவர்கள் நியமிக்கப்படும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
முந்தைய நடைமுறையில் காசநோய் மற்றும் எச்ஐவி போன்ற நோய்கள் பற்றியே கேள்விகள் இருந்தன; இனி அனைத்து நோய்களும் பரிசீலனையில் சேர்க்கப்படும்.
இந்த மாற்றம் குறித்து இந்திய வம்சாவளியினர் தெரிவித்ததாவது:
“அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் ட்ரம்ப் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்களின் கனவு சிதைந்தது. புதிய கட்டுப்பாடுகளால், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் இருந்தால் கூட, H1B விசா பெற முடியாது.”
அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் மூன்று மென்பொறியாளர்களில் ஒருவராவது இந்தியர் எனக் கூறப்படுகிறது. அவர்களின் குடும்பத்தினர் சுற்றுலா விசாவில் வருவது வழக்கம். புதிய உத்தரவால், அவர்களுக்கும் விசா பெறுவது கடினமாகிவிடும் எனக் கவலை தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்க தன்னார்வ அமைப்புகள் இந்த புதிய உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.