தாந்தோணிமலை கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு நடவடிக்கை தொடக்கம் – திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் தகவல்
கரூர்: தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தாந்தோணிமலை மற்றும் ஏமூர் பகுதிகளில் கோயிலுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஏமூர் பகுதியில் உள்ள சுமார் 12 ஏக்கர் இனாம் நிலம் தற்போது மனைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 8) அந்த நிலப்பகுதிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
“திருத்தொண்டர் அறக்கட்டளையும், அனைத்து சிவனடியார் கூட்டமைப்பும் 2012ஆம் ஆண்டிலிருந்து கோயில் நிலங்களை மீட்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. நிலம் அல்லது மனை வாங்கும் போது குறைந்தது 120 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். ரியல் எஸ்டேட் மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“2012ஆம் ஆண்டிலிருந்து கோயில் நில மீட்புக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு, சில பொருளாதார வலிமை மற்றும் ரியல் எஸ்டேட் மாபியா அழுத்தங்களுக்கு அடிபணிந்து வருகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்,” என்றார்.
தாந்தோணிமலை கோயிலுக்காக பூஜை மற்றும் பிற கோயில் பணிகளுக்காக வழங்கப்பட்ட 600 ஏக்கர் தான நிலங்களில், சில நிலங்களுக்கு அதிகாரிகள் தனியாரின் பெயரில் பட்டா வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
“அந்த நிலங்களை மீண்டும் கோயிலின் சொத்தாக மாற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் மொத்தம் 5 சதவீதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு என்பது வரி செலுத்துவதற்கான ஆவணமாகும்; அதுவே உரிமை சான்றாகாது,” எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் இந்து சமய அறநிலையத்துறை வட்டாட்சியர் ராஜசேகர், தாந்தோணிமலை கோயில் பணியாளர்கள் மற்றும் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பின் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.