தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணிக் கட்சிகள் தீர்மானம்
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என். நேரு அலுவலகத்தில் நடைபெற்றது. மத்திய மாவட்டச் செயலாளர் க. வைரமணி தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, மாநகரச் செயலாளர் மேயர் மு. அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நவம்பர் 11-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “நாட்டில் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் கைப்பாவையாகவும், ஏதேச்சதிகார போக்குடன் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டிக்கிறோம்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, மமக, மனிதநேய ஜனநாயக கட்சி, யூனியன் முஸ்லிம் லீக், ஃபார்வர்டு பிளாக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட மற்றும் மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.