பொய்யான தகவல்களை கூறி முதல்வர் ஸ்டாலினை குறைகூற வேண்டாம் – அன்புமணி, ஆதவ் அர்ஜுனாவுக்கு காசிமுத்து மாணிக்கம் கண்டனம்
முதல்வர் மு.க. ஸ்டாலினை குறைகூறி தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“மேம்பால வழக்கில் பெங்களூருவிலிருந்து நேராக நீதிபதி அசோக்குமார் இல்லத்துக்கே சென்று காலை 11 மணிக்கு சரணடைந்தவர் முதல்வர் ஸ்டாலின். பின்னர் சிறைக்குச் சென்று சட்டரீதியான நடைமுறைகளை எதிர்கொண்டவர். சிறை என்றவுடன் ஓடாமல், நேர்மையாகச் சென்றவர் ஸ்டாலின் என்பது வரலாறு.
2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் அந்த வழக்குக்கு என்ன நடந்தது? எதையும் செய்யாமல் இருந்தவர்கள் இன்று விமர்சிக்க உரிமையில்லை. கரூரில் ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்தபோது, அதற்கும் மேலான உயிரிழப்பை தடுக்கச் செயல்பட்டது ஸ்டாலின் தலைமையிலான அரசு.
இரண்டு கோடி உறுப்பினர்கள் உள்ளதாக பெருமை பேசும் தவெகா இயக்கத்தில் ஒருவரைக்கூட மருத்துவமனையில் காணவில்லை. ஓடிப்போனவர்கள் தாங்களே; திமுகவினரை ஓடியவர்கள் என்று கூறுவது வெறும் பொய். காசு, செல்வம் இருப்பதற்காக எதையும் பேசும் போக்கை ஆதவ் அர்ஜுனா கைவிட வேண்டும்.
பட்டியல், வன்னியர் சமூகங்களைச் சேரவிடாமல் திமுக சதி செய்கிறது என்ற அன்புமணியின் குற்றச்சாட்டு உண்மையற்றது. உண்மையில், பாமக நிறுவனர் ராமதாசை கூட அன்புமணியிடம் இருந்து காப்பாற்றி வருவது திமுகதான். அன்புமணிக்கு கேபினட் அந்தஸ்தில் சுகாதார அமைச்சர் பதவி கிடைக்க திமுக முக்கிய பங்கு வகித்ததை மறக்கக்கூடாது.”
இவ்வாறு காசிமுத்து மாணிக்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.