பெண்கள் பாதுகாப்பு குறித்து எடப்பாடியின் தவறான பிரச்சாரம் – ஆர். எஸ். பாரதி கண்டனம்
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என கூறிய எடப்பாடி பழனிசாமியின் பொய்யான பிரச்சாரம் வெட்கத்திற்குரியது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“பெண்கள் பாதுகாப்பு குறித்து உண்மையற்ற தகவல்களை பரப்பி, அதனை அரசியல் ஆயுதமாக்க முயலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில எதிர்க்கட்சிகள், மக்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கி வருகிறார்கள்.
கோவை பகுதியில் நடந்ததாக கூறப்பட்ட பெண் கடத்தல் சம்பவம் குறித்து, காவல்துறை விரைவாக விசாரணை நடத்தியது. அந்தச் சம்பவம் குடும்பத் தகராறாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும், ‘என்னை யாரும் கடத்தவில்லை’ என வீடியோவழியாக தெரிவித்துள்ளார்.
அதேபோல காணாமல் போன சென்னை கண்ணகி நகர் மாணவியையும் காவல்துறை சில மணி நேரங்களிலேயே மீட்டு வீட்டில் ஒப்படைத்துள்ளது. இத்தனைக்கும் பிறகும், உண்மை வெளிவருவதற்குள் பெண்களின் பாதுகாப்பை கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி அவசரமான அறிக்கையை வெளியிட்டது வெட்ககரமானது.
எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் லாபத்திற்காக பெண்களின் பாதுகாப்பை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது மிகுந்த அற்பமான செயல்.
திமுக அரசை குறை கூற எந்த வழியும் கிடைக்காததால் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் முகமூடி நாளுக்கு நாள் கிழியுகிறது. பெண்களின் நலனையும் பாதுகாப்பையும் முதன்மையாகக் கருதும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, அவர்களது பாதுகாப்பில் எக்காரணம் கொண்டும் தளர்ச்சி காட்டாது. அது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.” என ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார்.