இன்று நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 8) கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையில், “தென்னிந்தியாவின் பல பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நாளை முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வட தமிழகத்தின் சில இடங்களிலும் மழை தொடரக்கூடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும், நாளை நெல்லை மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.