மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி நேரில் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அவரது இல்லத்துக்கு சென்று நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
நேற்று (நவம்பர் 7) கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், “பன்முகத் திறமை கொண்டு தமிழ்த் திரையுலகை உலகளவில் உயர்த்திய, நாட்டுப்பற்றும் கலைப் பற்று மிக்க தோழர் கமல்ஹாசனுக்கு அன்பு நிரம்பிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர், சென்னை போட் கிளப் பகுதியில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்துக்கு மாலை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் சென்றனர். அங்கு கமல்ஹாசனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை அன்புடன் வரவேற்ற கமல், நன்றியைத் தெரிவித்ததுடன் அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார்.